search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பள்ளி மாணவன்"

    கழுகுமலையில் விளையாடிக்கொண்டிருந்த மாணவனை தேள் கொட்டியது. அவனை ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் பரிதாபமாக உயிரிழந்தான்.
    கழுகுமலை:

    தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலை அருகே உள்ள வெற்றிலாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் முத்துசெல்வம். இவரது மகன் மணிராஜ் (வயது11). இவன் அந்த பகுதியில் உள்ள பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வந்தான். 

    விடுமுறை தினமான நேற்று விளையாடிய போது தேள் போன்ற ஒரு பூச்சி கொட்டியதாக பெற்றோரிடம் கூறினான். உடனடியாக மணிராஜை நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலன் இல்லாமல் நேற்று நள்ளிரவு மணிராஜ் பரிதாபமாக இறந்தான். 

    இது குறித்து கழுகுமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    சேலத்தில் மாயமான பள்ளி மாணவன் ஆதி சென்னையில் மீட்கப்பட்டான். போலீசார் நடத்திய விசாரணையில் படிக்க விருப்பம் இல்லாமல் மாணவன் சென்னைக்கு சென்றது தெரிய வந்துள்ளது.
    சேலம்:

    சேலம் சுக்கம்பட்டி பகுதியை சேர்ந்தவர் செந்தில். இவரது மகன் ஆதி (வயது 14). இவர் சேலத்தில் உள்ள ஒரு பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார்.

    நேற்று காலை வீட்டில் இருந்து பள்ளிக்கு செல்வதாக கூறி சென்ற ஆதி மாலையில் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் அக்கம் பக்கத்தில் தேடினர்.

    பின்னர் பள்ளியில் வந்து விசாரித்தபோது அவர் பள்ளிக்கு செல்லாமல் மாயமானது தெரிய வந்தது. இது குறித்த புகாரின் பேரில் சேலம் மாநகர போலீசார் அவரை தேடி வந்தனர்.

    இந்தநிலையில் சென்னை தாம்பரம் ரெயில் நிலையத்தில் பள்ளி மாணவர் ஒருவர் தனியாக சுற்றி திரிவதை பார்த்த சென்னை போலீசார் அவரை பிடித்து விசாரித்தனர். அப்போது அவர் சேலத்தில் மாயமான ஆதி என்பது தெரிய வந்தது.

    அவரை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்ற போலீசார் சேலம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் மாணவரின் பெற்றோருக்கும் தகவல் கொடுத்தனர்.

    இதற்கிடையே சேலம் போலீசார் நேற்றிரவு சென்னைக்கு புறப்பட்டு சென்றனர். மாணவனை இன்று சேலத்திற்கு அழைத்து வந்து அவரது பெற்றோரிடம் ஒப்படைக்கிறார்கள்.

    போலீசார் நடத்திய விசாரணையில் படிக்க விருப்பம் இல்லாமல் மாணவன் சென்னைக்கு சென்றதாக கூறப்படுகிறது. வேறு ஏதேனும் காரணம் உண்டா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    வாழப்பாடியில் கைக்கடிகாரம் மாயமானது குறித்து விசாரணை நடத்துவதாககூறி பள்ளி மாணவனை தாக்கிய உடற்கல்வி ஆசிரியரை பள்ளி நிர்வாகம், பணிநீக்கம் செய்துள்ளது.
    வாழப்பாடி:

    சேலம் மாவட்டம் வாழப்பாடி பேரூராட்சி 7-வது வார்டு பகுதியை சேர்ந்தவர் பிரபாகரன், ஜவுளி வியாபாரி. இவரது மகன் (வயது 15) வாழப்பாடி அடுத்த முத்தம்பட்டியிலுள்ள தனியார் வைகை மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார்.

    குழந்தைகள் தினமான கடந்த 14-ந்தேதி இவரது வகுப்பில் படித்துவரும் மற்றொரு மாணவருடைய கைக்கடிகாரம் மாயமானது.இது குறித்து உடற்கல்வி ஆசிரியர் வெங்கடேஷ் தனி அறையில் வைத்து மாணவரிடம் விசாரணை நடத்தினார்.

    அப்போது மாணவர் தான் அந்த கடிகாரத்தை எடுக்கவில்லை என ஆசிரியர் வெங்கடேஷிடம் பலமுறை கூறினார். ஆனால் மாணவர் கூறியதை நம்பாமல் ஆசிரியர் வெங்கடேஷ் பைப்பால் அடித்ததாக கூறப்படுகிறது. இதில் மாணவரது உடல் முழுவதும் காயம் ஏற்பட்டது. வீடு திரும்பியதும் வலியால் துடித்த மகனை கண்டதும் உடனே பெற்றோர் தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சை அளித்தனர்.

    கைக்கடிகாரம் மாயமானது குறித்து விசாரணை நடத்துவதாககூறி, தனது மகனை கண்மூடித்தனமாக தாக்கிய உடற்கல்வி ஆசிரியர் மற்றும் அதற்கு அனுமதித்த வைகை மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனக்கூறி, காயம் அடைந்த மகன் புகைப்படங்களுடன், அவரது தந்தை பிரபாகரன் சமூக வலைதளங்களில் தகவல் பரப்பினார்.

    இந்த தகவல் இரு தினங்களாக சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இதனையடுத்தே மாணவரின் பெற்றோரை அழைத்து பேசிய பள்ளி நிர்வாகம், மாணவரை தாக்கிய ஆசிரியரை பணிநீக்கம் செய்துள்ளது.

    இந்த சம்பவம் குறித்து வைகை மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி நிர்வாகி சின்னு என்கிற முத்துச்சாமி கூறியதாவது:-

    உடற்கல்வி ஆசிரியர் தாக்கியதில் மாணவர் காயமடைந்தது குறித்து தகவல் தெரியவந்ததும், சம்மந்தப்பட்ட ஆசிரியரை பள்ளியில் இருந்து பணி நீக்கம் செய்துவிட்டோம். இனி வருங்காலங்களில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க ஆசிரியர்களுக்கு உரிய அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார். #tamilnews
    ஓட்டுனர் உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டி விபத்து ஏற்படுத்திய பள்ளி மாணவன் போக்குவரத்தை ஒழுங்குபடுத்த வேண்டும் என்று நீதிபதி நூதன தண்டனை விதித்து உத்தரவிட்டார்.
    சென்னை:

    சென்னை புளியந்தோப்பு பகுதியை சேர்ந்த 17 வயது நிரம்பிய பள்ளி மாணவன்(பிளஸ்-1 படித்து வருகிறான்) கடந்த ஜனவரி மாதம் ஓட்டுனர் உரிமம் இல்லாமல் மோட்டார் சைக்கிளை ஓட்டி சென்று வயதான பெண்ணின் மீது மோதி விபத்தை ஏற்படுத்தினான். இதில் அந்த பெண்ணுக்கு கையில் காயம் ஏற்பட்டது.

    இந்த விபத்து தொடர்பாக போலீசார் அந்த பள்ளி மாணவன் மீது வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு சிறார் கோர்ட்டில் கடந்த 3-ந்தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை விசாரித்த நீதிபதி பள்ளி மாணவன் என்பதால், அவனுக்கு நூதனமான முறையில் தண்டனை வழங்கி இருக்கிறார்.

    அதாவது 2 நாட்கள்(ஒவ்வொரு நாளும் 8 மணி நேரம் வீதம் 16 மணி நேரம்) போக்குவரத்தை ஒழுங்குப்படுத்தி, சாலை விதிமுறைகள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று உத்தரவிட்டார்.

    அதன்படி, பள்ளி மாணவன் சென்னை கீழ்ப்பாக்கம் ஈகா தியேட்டர் சிக்னல் அருகே நேற்று போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபட்டான். அவனுக்கு கீழ்ப்பாக்கம் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் அன்பழகன், சப்-இன்ஸ்பெக்டர் பிரிட்டோ, தலைமை காவலர் கோபி ஆகியோர் போக்குவரத்து விதிமுறைகள் குறித்தும், ஒழுங்குபடுத்துவது குறித்தும் எடுத்துக்கூறினர்.

    ஹெல்மெட் அணியாமல் மோட்டார் சைக்கிள் ஓட்டி வந்தவர்களிடமும், ‘சீட்’ பெல்ட் அணியாமல் வாகனம் ஓட்டுபவர்களிடமும் சாலை விதிமுறைகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தினான்.

    ‘ஓட்டுனர் உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டக்கூடாது என்றும், ஓட்டுனர் உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டிய குற்றத்துக்காக நான் போக்குவரத்தை ஒழுங்கு செய்கிறேன்’ என்று சாலை விதிமுறைகளை மீறி வாகனம் ஓட்டுபவர்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தினான். இன்றும்(ஞாயிற்றுக்கிழமை) தனது பணியை செய்ய இருக்கிறான்.

    இதுகுறித்து அந்த பள்ளிமாணவனிடம் கேட்டபோது, ‘வாகன ஓட்டுனர் உரிமம் இல்லாமல் மோட்டார் சைக்கிளை ஓட்டிய குற்றத்துக்காக எனக்கு இந்த தண்டனையை நீதிபதி வழங்கினார். அவரிடம் 18 வயது நிரம்பிய பின், ஓட்டுனர் உரிமம் எடுத்து அதன்பிறகு தான் வாகனம் ஓட்டுவேன் என்று கூறி இருக்கிறேன். என்னை போல் இருக்கும் சிறுவர்கள் யாரும், ஓட்டுனர் உரிமம் இல்லாமல் வாகனத்தை இயக்காதீர்கள். நான் படித்து முடித்து பெரியவன் ஆகி போலீஸ் ஆவதே என் விருப்பம். இப்போது நான் செய்த போக்குவரத்து ஒழுங்குபடுத்தும் பணியை அப்போது போலீஸ் சீருடையில் வந்து செய்வேன்’ என்றான். 
    கச்சிராயப்பாளையம் அருகே 8-ம் வகுப்பு மாணவன் மர்ம மரணம் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கச்சிராயப்பாளையம்:

    விழுப்புரம் மாவட்டம் கச்சிராயப்பாளையம் அருகே உள்ள அக்கராயப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் கவியரசு. இவரது மகன் ரவீந்திரன் (வயது 13). இவன் அதே பகுதியில் உள்ள அரசு நிதிஉதவி பெறும் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்துவந்தான்.

    நேற்று காலை ரவீந்திரன் வெளியே சென்று வருவதாக வீட்டில் இருந்தவர்களிடம் கூறிசென்றான். ஆனால் நீண்ட நேரமாகியும் ரவீந்திரன் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த அவரது பெற்றோர் அவனை பல்வேறு இடங்களில் தேடிபார்த்தனர்.

    அப்போது வீட்டின் அருகே உள்ள புளிய மரத்தின் அடியில் துப்பட்டாவால் கழுத்து இறுக்கப்பட்ட நிலையில் மாணவன் ரவீந்திரன் மயங்கி கிடந்தான். இதை பார்த்த அவனது பெற்றோர் அதிர்ச்சியடைந்தனர். பின்னர் ரவீந்திரனை மீட்டு சிகிச்சைக்காக கள்ள குறிச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவனை பரிசோதனை செய்த டாக்டர்கள் ரவீந்திரன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இதுகுறித்து கச்சிராயப்பாளையம் போலீசில் ரவீந்திரனின்தாய் பாப்பாத்தி புகார் செய்தார். அதில் தனது மகன் சாவில் சந்தேகம் இருப்பதாக கூறியிருந்தார். இதன்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்தனர். மாணவனை யாரேனும் கொலை செய்தனரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கும்பகோணம் அருகே காவிரி ஆற்றில் குளிக்க சென்ற பள்ளி மாணவன் நீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தான்.
    கும்பகோணம்:

    கும்பகோணம் அருகே காவிரி ஆற்றில் குளிக்க சென்ற பள்ளி மாணவன் நீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தான்.

    கும்பகோணம் அடுத்த திருவிடைமருதூர் அம்மன்பேட்டை மேலவீதி பகுதியை சேர்ந்தவர் மார்டின். இவருடைய மகன் ஜெரின் கிரகோரி (வயது 15). இவர் அங்குள்ள ஒரு தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார்.

    இந்த நிலையில் நேற்று கும்பகோணம் காவிரி ஆற்றில் குளிக்க சென்றார். பின்னர் அவர் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த அவரது பெற்றோர் இது குறித்து திருவிடைமருதூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சுமார் 4 மணி நேரம் போராடி மாணவன் ஜெரின் உடலை மீட்டனர்.

    இதைத் தொடர்ந்து திருவிடைமருதூர் போலீசாரும் சம்பவ இடத்துக்கு வந்து இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கும்பகோணம் அடுத்த விளந்த கண்டம் பஞ்சாயத்து பாத்திமா நகர் பகுதியை சேர்ந்தவர் நிஜாமுதீன். காய்கறி வியாபாரம் செய்து வருகிறார். இவருடைய மகன் நிஜாம் (வயது 20). இவர் கும்பகோணத்தில் உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் படித்து வந்தார்.

    இந்த நிலையில் கல்லூரி விடுமுறை என்பதால் நேற்று மாலை நிஜாம் தன் நண்பர்கள் 4 பேருடன் மண்ணியாறு கரையில் குளிக்க சென்றார். அப்போது அனைவரும் குளித்து கொண்டிருந்த நேரத்தில் நிஜாம் தண்ணீரில் மூழ்கி விட்டதாக கூறப்படுகிறது. இதை பார்த்து மற்ற நண்பர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

    உடனே நிஜாமை அவர்கள் தேடி பார்த்தனர். ஆனால் அவர் கிடைக்கவில்லை. உடனே இது குறித்து திருப்பனந்தாள் போலீசில் தகவல் கொடுக்கப்பட்டது. இரவு நேரம் என்பதால் தீயணைப்பு வீரர்கள் வந்து தேடுவது கடினம் என்பதால் இன்று காலை தீயணைப்பு வீரர்கள் மண்ணியாறு பகுதியில் நிஜாமை தேடி வருகின்றனர்.

    இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    கம்பைநல்லூர் அருகே பள்ளி மாணவனை அரிவாளால் வெட்டி கொன்ற மர்ம கும்பல் தாயையும் வெட்டிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
    தருமபுரி:

    தருமபுரி மாவட்டம் கம்பைநல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் மகேந்திரன். இவரது மனைவி கலா.இவர்களது மகன் வெற்றிவேல் (வயது 16). இவர் அதேபகுதியில் உள்ள பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார்.

    நேற்று இரவு வீட்டில் கலாவும், வெற்றிவேலும் தூங்கி கொண்டிருந்தனர். அப்போது மர்ம நபர்கள் சிலர் வந்து கதவை தட்டினர். யாரோ கதவை தட்டுகின்றனர் என்று கதவை திறந்த வெற்றிவேல் அதிர்ச்சி அடைந்தார். அப்போது வீட்டில் வெளியில் மர்ம நபர்கள் அரிவாளுடன் நின்று கொண்டிருந்தனர். உடனே கண் இமைக்கும் நேரத்தில் அவர்கள் வெற்றிவேலை சரமாரியாக அரிவாளால் வெட்டினர்.

    இதனால் வலியால் வெற்றிவேல் அலறினார். அவரது அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த கலாவையும் அவர்கள் சரமாரியாக வெட்டினர்.

    இவர்களது அலறல் சத்தம் கேட்கவே அக்கம்பக்கத்தினர் ஓடிவந்தனர். அதற்குள் மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இந்த சம்பவத்தில் வெற்றிவேல் ரத்த வெள்ளத்தில் அதே இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து கம்பைநல்லூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே போலீசார் அங்கு விரைந்து வந்து வெற்றிவேல் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தருமபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். காயம் அடைந்த கலாவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

    சொத்து தகராறு காரணமாக கலாவையும் அவரது மகனையும் மர்ம நபர்கள் வெட்டினார்களா? என்று போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. #tamilnews
    முதல்-அமைச்சர் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த பள்ளி மாணவனை பெற்றோருடன் வரவழைத்து போலீஸ் எஸ்.பி. எச்சரித்து அனுப்பினார்.
    கோபி:

    ஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ள காசிபாளையம் பகுதியை சேர்ந்த 7-ம் வகுப்பு படிக்கும் மாணவன் ஒருவன் கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணிக்கு வீட்டில் இருந்து வெளியே வந்தான்.

    பிறகு அங்குள்ள ஒரு “காய்ன் போனில்” ஒரு ரூபாயை எடுத்து போலீஸ் கண்ட்ரோல் எண் 100-க்கு அடித்தான். மறுமுனையில் ஹலோ.. என்று சத்தம் கேட்டதும் மாணவன், “காசிபாளையம் பகுதியில் வெடிகுண்டு வைத்திருப்பதாக சிலர் பேசியதை நான் கேட்டேன் அதற்காகத்தான் பேன் பண்ணினேன்” என்று கூறி போனை வைத்துவிட்டான்.

    இதை கேட்டு பதட்டம் அடைந்த போலீசார் காசிபாளையம் ஊருக்குள் புகுந்து பல இடங்களில் அதிரடி சோதனை நடத்தினர். திடீரென ஊருக்குள் இவ்வளவு போலீசார் புகுந்து என்ன தேடுகிறார்கள்? என பொதுமக்களும் பதட்டம் அடைந்தனர்.

    பல மணி நேர அதிரடி விசாரணைக்கு பிறகு வெடிகுண்டு வைத்திருப்பதாக போனில் கூறியது புரளி என தெரிய வந்தது.

    பிறகு அதே பள்ளி மாணவன் நேற்று மாலை பள்ளி முடிந்து வீட்டுக்கு வந்தான். அவனது தாயார் வீட்டில் பாத்திரம் தேய்த்துக் கொண்டிருந்தார். இந்த நேரத்தில் தனது தாயாரின் செல்போனை எடுத்து மீண்டும் 100-க்கு அடித்தான்.

    இந்த தடவை அந்த போன் கால் சென்னை போலீஸ் கண்ட்ரோல் அறைக்கு சென்றது. போனில் பேசிய மாணவன். “முதல்-அமைச்சர் வீட்டுக்கு வெடிகுண்டு வைத்திருக்காங்க” என்று கூறி விட்டு போனை வைத்துவிட்டான்.

    இதை கேட்டதும் பதட்டம் அடைந்த போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். இது பற்றி தகவல் சொன்னதும் வெடிகுண்டு நிபுணர்கள் சென்னையில் உள்ள முதல்-அமைச்சர் வீட்டுக்கு விரைந்து சென்று சோதனை நடத்தினார்கள். ஆனால் அது புரளி என தெரிய வந்தது.

    உடனடியாக போலீசார் போனில் பேசியது யார்? என்று செல்போன் எண்ணை ஆய்வு செய்தபோது அந்த போன் ஈரோடு மாவட்டம் கோபி பகுதியில் இருந்து வந்தது என தெரிய வந்தது. உடனே ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேசனுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவரது உத்தரவின் பேரில் கோபி போலீசாருக்கும் அருகே உள்ள கடத்தூர் போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

    தொடர்ந்து கோபி மற்றும் கடத்தூர் பகுதி போலீசார் நடத்திய விசாரணையில் முதல்-அமைச்சர் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த பள்ளி மாணவனை பிடித்தனர்.

    பிறகு போலீசார் அந்த மாணவனையும் அவனது பெற்றோரையும் அழைத்து ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு வந்தனர்.

    அந்த மாணவனிடம் எஸ்.பி, “எதற்காக இப்படி போனில் பேசினாய்?” என்று கேட்க விளையாட்டுக்காத்தான் இப்படி பேசினேன்.. என்று மிரண்டபடி.. பயந்து கொண்டே கூறினான்.

    “படிக்கும் வயசில் இப்படியெல்லாம் போனில் பேசினால் பெரிய விபரீதம் ஆகும் தெரியுமா.. இல்லையா? இப்படியெல்லாம் போனில் பேச கூடாது” என எஸ்.பி. எச்சரித்தார்.

    மேலும் அவனது பெற்றோருக்கும் எஸ்.பி.சக்தி கணேசன் எச்சரித்து அறிவுரை கூறினார்.

    படிக்கும் பையனிடம் செல்போன் கொடுத்தால் இப்படிதான் நடக்கும் கவனமாக நடந்து கொள்ளுங்கள்” என்று எச்சரித்து அனுப்பி வைத்தார்.
    கல்வி கட்டணம் செலுத்த தவறிய மாணவனுக்கு மாற்று சன்றிதழ் கொடுத்து பள்ளியை விட்டு நீக்கிய தனியார் பள்ளி நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்க கலெக்டரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
    கோவை:

    கோவை கலெக்டர் அலுவலகத்தில் இன்று மக்கள் குறை தீர்க்கும் முகாம் நடைபெற்றது. கலெக்டர் ஹரிஹரன் பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றார். அவரிடம் கோவை கோகுலம் காலனி இந்திரா நகரை சேர்ந்த 10-ம் வகுப்பு மாணவர் ஒரு மனு அளித்தார்.

    நான் கோவை முல்லை நகரில் உள்ள தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறேன். எனது தந்தை தனியார் நிறுவனத்தில் கிளார்க்காக வேலை பார்த்து வருகிறார்.

    பண கஷ்டம் காரணமாக என்னால் இந்த வருடம் கல்வி கட்டணத்தை மொத்தமாக செலுத்த முடியவில்லை. எனது தந்தை மாத மாதம் கட்டி விடுகிறேன் என கூறினார். ஆனால் பள்ளி நிர்வாகம் இதனை ஏற்கவில்லை. எனது மாற்று சான்றிதழை கொடுத்து அனுப்பிவிட்டனர். அதன் பின்னர் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரியை சந்தித்து மாநகராட்சி பள்ளியில் 10-ம் வகுப்பில் சேர அனுமதி கேட்டோம்.

    அவர் பி.என். புதூரில் உள்ள மாநகராட்சி பள்ளி தலைமை ஆசிரியையிடம் பேசி அவரை சந்தித்து சேர்ந்து கொள்ளும் படி கூறினார். ஆனால் மாநகராட்சி தலைமை ஆசிரியை என்னை சேர்த்து கொள்ள மறுத்துவிட்டார்.

    எனது மாற்று சான்றிதழை கொடுத்து அனுப்பிய தனியார் பள்ளி மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் நான் மாநகராட்சி பள்ளியில் சேர்ந்து படிக்க அனுமதி வழங்கி உத்தரவிட வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறி உள்ளார்.
    மானூர் அருகே மின்சாரம் தாக்கி பள்ளி மாணவன் பரிதாபமாக இறந்தான்.
    மானூர்:

    மானூர் அருகே உள்ள பிள்ளையார்குளம் குறிச்சிநகரை சேர்ந்தவர் அய்யப்பன் (வயது 45). வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். அவருடைய மனைவி பட்டாணி செல்வி (42). இவர்களுடைய மகன் இசக்கிமுத்து (14). இசக்கிமுத்து பக்கத்து ஊரான அலவந்தான்குளத்தில் உள்ள தனியார் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தான்.

    இவர்களது வீட்டுக்கு மின் இணைப்புக்காக அங்குள்ள மின்கம்பத்தில் இருந்து மின்இணைப்பு ஒயரை வீட்டின் முன்பாக ஒரு இரும்பு குழாய் நட்டு, அதன் மூலம் சர்வீஸ் பைப்புக்கு கொண்டு சென்றுள்ளனர். இதில் எப்படியோ மின்கசிவு ஏற்பட்டு, அந்த இரும்பு குழாயில் மின்சாரம் பாய்ந்துள்ளது.

    இதனை அறியாத இசக்கிமுத்து நேற்று காலையில் பல் துலக்கியவாறு இரும்பு குழாயில் சாய்ந்துள்ளான். அதில் மின்சாரம் இருந்ததால் இசக்கிமுத்து தூக்கி வீசப்பட்டான். இதனால் படுகாயம் அடைந்து ஆபத்தான நிலையில் இருந்த அவனை ஆம்புலன்சு மூலம் பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

    ஆனால் அங்கு டாக்டர்கள் பரிசோதனை செய்த போது இசக்கிமுத்து ஏற்கனவே இறந்தது தெரியவந்தது.

    தனது ஒரே மகனை இழந்த தாய் கதறி அழுதது மிகவும் பரிதாபமாக இருந்தது. இதுகுறித்து மானூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 
    ×